132 கோடியில் உலகின் காஸ்ட்லி காரை வாங்கியது உங்களுக்கு தெரிந்தவர்தான்.. காட்டு தீயாய் பரவும் செய்தி......
132 கோடியில் உலகின் காஸ்ட்லி காரை வாங்கியது உங்களுக்கு தெரிந்தவர்தான்.. காட்டு தீயாய் பரவும் செய்தி
132 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் மிகவும் விலை உயர்ந்த காரை வாங்கியது யார்? என்பது தொடர்பான செய்தி தற்போது காட்டு தீயாய் பரவி வருகிறது.
பிரான்ஸை சேர்ந்த புகாட்டி (Bugatti) நிறுவனம் மிகவும் விலை உயர்ந்த சூப்பர் கார்களை தயாரித்து வருகிறது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள புகாட்டி நிறுவனத்தின் தற்போதைய வயது சரியாக 110.
ஆம், புகாட்டி நிறுவனம் கடந்த 1909ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 110 ஆண்டுகள் உருண்டோடி சென்று விட்டன. புகாட்டி நிறுவனம் தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, La Voiture Noire என்ற சூப்பர் கார் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில், மிகவும் புகழ்பெற்ற 2019 ஜெனீவா மோட்டார் ஷோ (2019 Geneva Motor Show) கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்தான், La Voiture Noire சூப்பர் கார் முதல் முறையாக உலகிற்கு காட்டப்பட்டது.
இன்றைய தேதியில் இதுதான் உலகின் மிகவும் விலை உயர்ந்த கார் ஆகும். புகாட்டி நிறுவனம் ஒரே ஒரு La Voiture Noire சூப்பர் காரை மட்டுமே தயாரித்துள்ளது. இந்த காரில், 8.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டபிள்யூ16 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
புகாட்டி La Voiture Noire சூப்பர் கார் மணிக்கு அதிகபட்சமாக 260 மைல்கள் வேகத்தில் பறக்கும் திறன் உடையது. இது 2 டோர் கூபே ரகத்தை சேர்ந்த கார் ஆகும். என்றாலும் லிமோசைன் ரக கார்களின் சொகுசு, ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் கார்களின் சக்தியை கலந்து கட்டிய மாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜெனீவா மோட்டார் ஷோ நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது வெறும் மாடல் மட்டும்தான். அதனை இயக்க முடியாது. La Voiture Noire காரின் உண்மையான, சாலையில் ஓட்டக்கூடிய வெர்ஷனை உருவாக்க புகாட்டி நிறுவனத்திற்கு இன்னும் 2 ஆண்டுகள் தேவைப்படும் என கூறப்படுகிறது.
செல்வ செழிப்பில் திளைத்து கொண்டிருப்பவர்கள் எல்லாம், புகாட்டி நிறுவன கார்களின் மீது பேரார்வம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவர், உலகின் மிகவும் விலை உயர்ந்த புகாட்டி La Voiture Noire சூப்பர் காரை ஏற்கனவே வாங்கி விட்டார்.
La Voiture Noire சூப்பர் கார் விற்பனை செய்யப்பட்டு விட்டது என்பதை புகாட்டி நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால் அந்த காரை வாங்கியது யார்? என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க புகாட்டி நிறுவனம் மறுத்து விட்டது.
La Voiture Noire சூப்பர் கார் இந்திய மதிப்பில் சுமார் 132 கோடி ரூபாய்க்கு (வரிகள் உள்பட) விற்பனை செய்யப்பட்டுள்ளது!!! புகாட்டி நிறுவன தலைவர் ஸ்டீபன் வின்கெல்மான் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். ஆனால் காரை வாங்கியவரின் பெயரை அவர் வெளியிடவில்லை.
இதன் காரணமாக புகாட்டி La Voiture Noire சூப்பர் காரை யார் வாங்கியிருப்பார்? என்ற கேள்வி சிறகு முளைத்து பறக்க ஆரம்பித்தது. அத்துடன் பல்வேறு யூகங்களும் கிளம்பின. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் முன்னாள் தலைவரான பெர்டினாண்ட் பைச் இந்த காரை வாங்கியிருப்பதாக முதலில் கூறப்பட்டது.
இது தொடக்கத்தில் வந்த தகவல் ஆகும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் வேறு விதமாக உள்ளது. போர்ச்சுக்கல்லை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. உலகம் முழுவதும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
கால்பந்தை அவ்வளவாக விரும்பாத இந்தியாவிலும் கூட கிறிஸ்டியானா ரொனால்டோவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த கிறிஸ்டியானா ரொனால்டோதான், புகாட்டி La Voiture Noire சூப்பர் காரை வாங்கியுள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில ஸ்பானிஷ் செய்தி நிறுவனங்கள் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு பரபரப்பை கூட்டியுள்ளன. புகாட்டி La Voiture Noire சூப்பர் காரை, ஃபுட் பால் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானா ரொனால்டோ வாங்கியிருக்கலாம் என ஸ்பானிஷ் வெப்சைட்டான Marca.comகூட செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் யூகத்தின் அடிப்படையில் மட்டுமே தற்போது இந்த தகவல் உலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவி கொண்டுள்ளது. புகாட்டி La Voiture Noire சூப்பர் காரை, கிறிஸ்டியானா ரொனால்டோ வாங்கியதற்கான எவ்வித ஆதாரங்களும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் கிறிஸ்டியானா ரொனால்டோ, விலை உயர்ந்த கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது உண்மையே. மெர்சிடிஸ் சி-க்ளாஸ் ஸ்போர்ட் கூபே, ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம், லம்போர்கினி அவென்டெடார் எல்பி700-4 உள்ளிட்ட கார்கள் அவரிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர அஸ்டன் மார்ட்டின் டிபி9, மெக்லாரன் எம்பி4 12சி மற்றும் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீடு உள்ளிட்ட கார்களும் அவரிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு ஏன்? இதே புகாட்டி நிறுவனத்தின் வெரோன் கார் கூட அவரிடம் உள்ளது.
புகாட்டி வெரோன் காரை கிறிஸ்டியானா ரொனால்டோ கடந்த 2016ம் ஆண்டு வாங்கினார். பொதுவாக புதிய கார்களை வாங்கினால், அந்த காருடன் எடுத்து கொண்ட புகைப்படம், வீடியோக்களை சமூக வலை தளங்களில் வெளியிடுவதை கிறிஸ்டியானா ரொனால்டோ வழக்கமாக வைத்துள்ளார்.
ஆனால் இம்முறை அவ்வாறான புகைப்படங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே La Voiture Noire காரை கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானா ரொனால்டோ வாங்கியிருப்பாரா? என்பது யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது.
கிறிஸ்டியானா ரொனால்டோவிற்கு நெருங்கி வட்டாரங்களும் கூட, La Voiture Noire சூப்பர் காரை அவர் வாங்கவில்லை என்றே தெரிவிக்கின்றன. ஆனால் அந்த காரை அவர் வாங்கியிருக்கலாம் என செய்திகள் மட்டும் உலகம் முழுக்க றெக்கை கட்டி பறந்து கொண்டுள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 132 கோடி ரூபாய் மதிப்புள்ள La Voiture Noire சூப்பர் காரை உலகில் யாரோ ஒருவர் வாங்கி விட்டார் என்பது உண்மை. ஆனால் அவர் யார்? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியாததால், ஆட்டோமொபைல் ரசிகர்கள் தலையை பிய்த்து கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment